Input your search keywords and press Enter.

தேர்தல் பத்திரங்கள்: பாகம் 5

பிப்ரவரி 2017ல் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி மாநிலங்களவையில் அநாமதேய முறையில் அரசியல் கட்சிகளுக்கு கொடை அளிக்கும் முறையை அறிமுகப் படுத்தும் முடிவை அறிவித்தார்.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளின் கொடையாளர்கள் பற்றிய விவரங்கள் வெளியில் தெரியாமல் காக்கப் படும் என்று உறுதியளித்தார். இதனால் ஒரு கொடையாளி அநாமதேய முறையில் பத்திரங்களை வாங்கலாம் மற்றும் அவருக்கு விருப்பமான அரசியல் கட்சிக்கு வழங்கலாம்.

ஒரு கொடையாளி எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு வழங்கினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்று ஜெயிட்லி ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 2018ல் “த குவிண்ட்” ரூ. 1000 மதிப்புள்ள இரண்டு பத்திரங்களை வாங்கியது. அந்தப் பத்திரங்கள் புற ஊதாக் கதிர் (‘யுவி’) ஒளியில் தெரியக் கூடிய ஒரு ரகசிய “ஆல்ஃபா நியூமரிக் கோடு” அதாவது எண்ணெழுத்துக் குறியீடு கொண்டிருப்பதாக செய்தி வெளியிட்டவுடன் அரசு ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டது.

“இந்த குறியீட்டு எண், பாரத ஸ்டேட் வங்கியால் வாங்குபவர் அல்லது டெபாஸிட் செய்யும் அரசியல் கட்சிகளுடன் சம்பந்தப் பட்ட எந்த ஆவணத்திலும் குறிக்கப் படுவது இல்லை,” என்று அரசு கூறியது. வங்கி பத்திரங்கள் வாங்குபவர்களை எந்த அரசியல் கட்சியின் பணப் பரிமாற்ற விவரங்களிலும் இணைப்பதில்லை. எனவே பத்திரங்கள் வாங்கியவர், அளிக்கப் பட்ட கொடைத் தொகை போன்ற விவரங்களைக் கண்காணிக்க பத்திர எண்கள் உபயோகப் படுத்தப் படாது மற்றும் உபயோகப் படுத்தப் பட முடியாது என்றும் அரசு கூறியது. இந்தப் பத்திரங்களை விற்கும் முழு உரிமையும் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்தது என்படும் குறிப்பிடப் பட்டது.

வெளிப் படைத்தன்மை ஆர்வலர் கமடோர் லோகேஷ் பாத்ராவால் பெறப்பட்ட ஆவணங்கள், இதற்கு முன்னால் வெளியிடப் படாதவை, இது உண்மைக்கு மாறானது என்று தெரிவிக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி பத்திரங்களின் வரிவடிவ எண்ணெழுத்துக் குறியீட்டை பத்திரங்கள் வாங்கியவர்கள், நன்கொடைத் தொகை, எந்த அரசியல் கட்சிக்குக் கொடுக்கப் பட்டது போன்ற விவரங்களை அறிய உபயோகப் படுத்தியது.

இந்தப் பத்திரங்கள் சம்பந்தமான விவரங்களை கண்காணிக்கும் முறை நிதி அமைச்சகத்தால் அனுமதிக்கப் பட்டது. பத்திரங்கள் சம்பந்தமான சட்டங்கள், பாரத ஸ்டேட் வங்கி இந்தப் புள்ளி விவரங்களைத் தேவைப் படும்போது சட்ட அமலாக்கத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் இரண்டும் தங்களது அரசியல் தலைவர்களின் கட்டளைக் கிணங்க வேலை செய்வதாக எதிர்க் கட்சிகளின் குற்றச் சாட்டுக்களுக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரங்கள் கொடையாளர்கள் பற்றிய விவரங்கள் முற்றிலும் ரகசியமாக இல்லை , அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இந்த விவரங்களை அறிந்திருந்தது என்பதை இந்த விவர வெளியீடு நிரூபிக்கிறது. உண்மையில் இந்த விவரங்கள் தெரியாதவர்கள் எதிர்க் கட்சிகளும் பொது மக்களும் மட்டுமே.

ஆனாலும் மக்கள் அவையில் ஜெயிட்லி, கொடையாளர்கள் பற்றிய இந்த விவர மறைப்பு எதிர்க் கட்சிகள் அரசியல் நிதி பெற சம நிலை விளையாடு களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று வற்புறுத்திச் சொன்னார்.

“அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான ஒரு சட்டத்தை இயற்றுவதென்பது அந்த அரசின் பெருந்தன்மையை காட்டுகிறது,” என்று ஜெயிட்லி சொன்னார்.

அநாமதேயம் என்பது ஒரு கண்துடைப்பு

தேர்தல் பத்திரங்கள் திட்டம் முதன் முறையாக நிதி அமைச்சரால் பட்ஜெட் தினத்தன்று அறிவிக்கப் பட்ட போது அரசுக்கு இந்த பத்திரங்கள் உண்மையில் எவ்வாறு செயலாற்றும் என்று தெளிவான கருத்து இல்லை.

ரிசர்வ் வங்கி, இந்திய தேர்தல் ஆணையம், மற்றும் எதிர்க் கட்சிகளுடன் பெயரளவில் ஆலோசனை நடத்தியது. ஆனால் அவர்களின் கருத்துக்களை அலட்சியப் படுத்தியது.

ஓர் ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, ஜனவரி 2018ல் நிதி அமைச்சகம் தேர்தல் பத்திரங்களுக்கான அடிப்படைகருத்தியல் கட்டமைப்பை வரைந்தது. பிறகு பாரத ஸ்டேட் வங்கியுடன் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல் படுத்துவது என்பது பற்றி கலந்தாலோசித்தது.

ஜனவரி 16, 2018 அன்று நிதி அமைச்சகத்துடன் நடந்த சந்திப்பில் பாரத ஸ்டேட் வங்கி, பத்திரங்களை வாங்குபவர்களையும் , பெறுபவர்களையும் அடையாளம் காட்டும் முறையில் இந்தப் பத்திரங்கள் கண்டிப்பாக ஒரு வரிசை எண் கொண்டிருக்க வேண்டும் என்று விளக்கியது.

“தேர்தல் பத்திரங்களில் அவற்றை வாங்குபவர்கள், பெறுபவர்கள் பெயர்கள் இருக்காது, ஆனால் ஒரு வரிசை எண் இருப்பது அவசியமாகிறது,” என்று வங்கி அதிகாரிகள் நிதி அமைச்சகத்துடனான சந்திப்பில் சொன்னதாக மந்திரி சபையின் உள் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வரிசை எண் இல்லாவிட்டால் பத்திரங்களின் வெளியீடு, மற்றும் நிதி மாற்றத்துக்குமான கணக்கு ஒப்பீடுகளுக்காக வங்கிகளுக்கு தணிக்கை முறை எதுவும் இருக்க முடியாது. அமலாக்க இயக்குநரகம் மற்றும் நீதி மன்றங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் பற்றிய விவரங்களை வங்கியிடம் கேட்க நேர்ந்தால் பதில் சொல்ல இயலாத நிலமை ஏற்படும். தனிப்பட்ட அடையாள குறியீடு இல்லாவிட்டால் போலி பத்திரங்கள் தயாரிக்கப் படலாம். அதற்கான கணக்குகளை கையாள்வது இயலாமல் போகும் என்று வங்கி விளக்கம் அளித்தது.

“பத்திரங்களின் முறையான கையாளுதலுக்காக பாரத ஸ்டேட் வங்கி பத்திரங்கள் பரிமாற்றம் பற்றிய எல்லா விவரங்கள் பற்றியும் தெளிவான விவரம் தன்வசம் வைத்திருக்கும். எந்த தனி நபர்கள், அல்லது பெரு நிறுவனங்களால் வாங்கப் பட்டது, எந்த அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப் பட்டது என்ற எல்லா விவரங்களும் வங்கியிடம் இருக்கும்,” என்பது இதனால் உறுதி செய்யப் படுகிறது. வங்கிக்கும் இந்தத் திட்டத்திற்கும் இந்த மாதிரியான சிக்கல்கள் ஏற்படாத வண்ணம் பாரத ஸ்டேட் வங்கி பத்திரங்களில் வரிசை எண் பதிய அனுமதிக்கப் படலாம்.

ஆனால் அந்த விவரங்களை வெளியில் கசியாமல் மிக ரகசியமாக காப்பாற்றும் படி வங்கி வற்புறுத்தப் படலாம்,” என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தங்களது குறிப்பில் கூறினர்.

தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமான சட்டங்கள், அமலாக்கத் துறையினர் கேட்கும்போது இந்தத் தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது.

ஜனவரி 2, 2018 குறிப்பின் படி செக்‌ஷன் 6(4) குறிப்பிடுவது :

தேர்தல் பத்திரங்கள் வாங்குபவர்களால் கொடுக்கப் படும் விவரங்கள் நம்பிக்கைக்குரியதாக வைக்கப் படும். தகுதி வாய்ந்த நீதி மன்றம் அல்லது குற்றம் சம்பந்தமான வழக்குத் தொடுக்கப் பட்ட நேரத்தில் அமலாக்கத் துறையினர் கேட்கும் போது தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்த அதிகாரிகளுக்கும் இந்த விவரங்கள் வெளியிடப் படாது.

குற்ற வழக்குகள் பற்றி இந்தச் சட்டங்கள் வேறு விவரங்களை இதில் கூறவில்லை. இதனால் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து அமலாக்கத் துறையினர் எந்த நேரத்தில் எப்படி புள்ளி விவரங்களை கேட்டுப் பெறலாம் என்பது பற்றிய தெளிவற்ற நிலை நிலவுகிறது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகளோ, கொடையாளர்களோ அரசால் மிரட்டப் படுவார்களா என்பது பற்றியும், பாரத ஸ்டேட் வங்கி அளிக்கப் பட்ட வாக்குறுதியை மீறியதற்காக அரசால் குற்றம் சாட்டப் படுமா என்பது பற்றியும் தெளிவற்ற நிலையை உண்டாக்கியுள்ளது.

கூண்டிலடைக்கப் பட்ட கிளிகள்

அதிகாரத்தில் இருக்கும் அரசால் தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து பெற முடியுமா?

பத்திரங்கள் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளப் படக்கூடியவை என்பதும், அதிகாரத்தில் உள்ள அரசின் அதிகாரத்துக்கு அமலாக்கத் துறையினர் பணிந்து போகும் சரித்திர உண்மை நிரூபிக்கப் பட்டிருப்பதும் இந்த பத்திரங்களின் ரகசியக் காப்புத் தன்மை உறுதியானதல்ல என்பதை தெளிவாக்குகிறது.

இந்த பத்திரங்கள் திட்டத்தை நடத்தும் பாரத ஸ்டேட் வங்கி, நிதி அமைச்சகம் கையெழுத்திடும் வரை, சட்டங்களை மீறும் விதமான அதன் குறிப்புகளையும் ஆணைகளையும் நிறுத்தி வைத்தது என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வங்கி தகவல் கோரும் உரிமையின் கீழ் சுதந்திரமாக செயல் படக்கூடிய பொது அதிகாரம் பெற்றிருந்தும் அதனிடம் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் பதிலளிப்பதில்லை.

பிப்ரவரி 2019 ல், அந்த ஆண்டின் பொதுத் தேர்தலுக்காக ஒரு சிறப்பு தேர்தல் பத்திர வெளியீட்டை நீட்டிக்குமாறு யூனியன் அரசாங்கம் பாரத ஸ்டேட் வங்கியை வற்புறுத்தியது. வங்கி முதலில் மறுத்தது என்றாலும் பிறகு ஒப்புக் கொண்டது.

விதிகளின் படி பாரத ஸ்டேட் வங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு கொடையாளர்கள் நிதி வழங்கும் தேர்தல் பத்திர விற்பனையை ஓர் ஆண்டில் நான்கு முறை, பத்து நாள்கள் என்னும் கால அளவிற்கு அனுமதிக்கிறது. பொதுத் தேர்தல் ஆண்டில் அதிகப் படியாக 30 நாட்களுக்கு பத்திர விற்பனை அனுமதிக்கப் படும்.

பிப்ரவரி 2019 ல் மத்திய அரசாங்கம் 30 நாள் பத்திர விற்பனையை 35 நாட்களுக்கு நீட்டிக்குமாறு வற்புறுத்தியதாக ஹஃப் போஸ்ட் பெற்ற கடிதப் போக்குவரத்துகள் தெரிவிக்கின்றன. சட்டத்திற்கு எதிரான இந்த நீட்டிப்பு அப்போது நிதி அமைச்சராக இருந்த ஜெயிட்லியால் அதே மாதம் ஒப்புதல் அளிக்கப் பட்டது என்று நிதி அமைச்சகத்தின் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

பிப்ரவரி 28, 2019ல் நிதி அமைச்சகம் ஒரு மின்னஞ்சல் மூலமாக இது சம்பந்தமான அறிவுறுத்தல்களை செயல் படுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு கூறியது.

அதே நாள் வங்கி, நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் சட்டத்திற்கு எதிரானது என்றும் அது பற்றிய விளக்கம் தருமாறும் பதில் எழுதியது.

நிதி அமைச்சகம் கால அளவை நீட்டிக்கும் பொறுப்பை பாரத ஸ்டேட் வங்கியின் மீது சுமத்த முயற்சித்தது. வங்கிக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சலில் பாரத ஸ்டேட் வங்கியின் பரிந்துரையினால் தான் பத்திர வெளியீடு கால அளவு 30 நாட்களிலிருந்து 35 ஆக அதிகரிக்க அனுமதிக்கப் பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் பாரத ஸ்டேட வங்கி இந்த சட்ட மீறுதலுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ள மறுத்தது.

“தேர்தல் பத்திர வெளியீடு சம்பந்தமாக வரையப் பட்ட செய்தி வெளியீட்டில் உள்ள நாட்கள் பற்றிய விவரம் பிப்ரவரி 27, 2019 அன்று உங்களிடமிருந்து தொலைபேசி மூலம் எங்களுக்குத் தெரிவிக்கப் பட்டதே தவிர பிப்ரவரி 28, 2019 மின்னஞ்சலில் குறிப்பிடப் பட்டது போல எங்கள் முனையிலிருந்து, அதாவது பாரத ஸ்டேட வங்கியால், சிபாரிசு செய்யப் படவில்லை.” என்று பாரத ஸ்டேட் வங்கி தனது பதில் மின்னஞ்சலில் குறிப்பிட்டது.

ஆனால் அதோடு தன் மீது குற்றம் சாட்டப் படாத வரையில், சட்டத்திற்கு எதிரான 35 நாட்கள் பத்திர வெளியீட்டுக்கு ஒப்புக் கொள்வதாகவும் அதே மெயிலில் தெரிவித்தது.

ஆனால் அதற்குள் உச்ச நீதி மன்றம் தேர்தல் பத்திரங்கள் வெளியீடு மற்றும் செயலாக்கம் மீதான மனுக்களின் விசாரணையைத் தொடங்கியிருந்தது.

மனுக்களை விசாரித்து வந்த நேரத்தில் ஏப்ரல் 12, 2019 அன்று உச்ச நீதி மன்றம் ஓர் இடைக்கால ஒழுங்கு முறையை அறிவித்தது. மற்றக் குறிப்புகளோடு, முக்கியமாக, உச்ச நீதி மன்றம் யூனியன் அரசாங்கத்தை சட்டமுறையை மீற வேண்டாமென்றும், சிறப்புப் பத்திர வெளியீட்டுக்கான கால வரையறையை 30 நாட்களுக்கே நிர்ணயிக்குமாறும் சொன்னது.

நிதி அமைச்சகம் கால அளவை 35 நாட்களுக்கு மாற்றும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரலாமா என்று யோசித்தது என்றாலும் முடிவில் தன் எண்ணத்திலிருந்து பின்வாங்கியது.

(மொழிபெயர்ப்பு: சாந்தி பாலு)

(இந்த ரிப்போர்ட் முதலில் ஹஃப் போஸ்ட்-ல் வெளியானது. லிங் இங்கே.)

Read Parts 1 to 4 here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *